தேடல் – நாம் மட்டும் தானா இந்த அண்டத்தில் – பாகம் 2

இந்த பாகத்துல நான் சொல்ல போற விஷயங்கள் நம்ப முடியாத வகையில இருக்கலாம். இதுல நான் ஆதாரம்ன்னு சொல்ற விஷயங்கள், வேற்றுகிரகத்தினர் உண்டு என்று நம்புபவர்களால் மட்டுமே (சில நடுநிலையாளர்கள் சேர்த்து) ஏற்று கொள்ளபட்ட விஷயங்கள். இவற்றை நானும் நம்புறதால தான் நான் இங்க ஆதாரம்ன்னு சொல்றேன். உங்களுக்கு நம்பிக்கை இல்லைனா அப்படியே விட்டிருங்க (இது சும்மா ஒரு நாவலோட பகுதின்னு நினைச்சிக வேண்டியதுதான்)

1. எகிப்தின் பிரமிடுகள் யாருடைய சூத்திரம்?

எகிப்தின் அடையாளமாகவே மாறிவிட்ட “பெரும் பிரமிடு” 2.5 மில்லியன் சுண்ணாம்பு கற்களால் கட்டபட்டது. இதன் கட்டமைப்பு கிட்டதட்ட மிகத்துல்லியமாக(ஒரு கொணத்திற்கும்[டிகிரி] குறைவாக) வட துருவத்தின் நேர்கோட்டில் உள்ளது. (உங்கள் நினைவிற்கு, வடதுருவம் காந்தசக்தியின் திசை). எந்த ஒரு தொழில் நுட்பமும் இல்லாத காலத்தில், எதேச்சையாக இது நடந்திருக்குமா?

இன்றைய விஞ்ஞானிகள் வட துருவத்தை துருவ நட்சத்திரம் மூலமாக அறிந்து கொள்கிறார்கள். அவர்களின் கூற்றுப்படி பண்டைய எகிப்ப்தியர்களின் காலத்தில் துருவ நட்சத்திரம் அவர்கள் கண்களுக்கு புலப்பட்டிருக்காது. (But astronomers know that the Earth regularly wobbles very slowly on its axis over a period of 26,000 years and so in ancient Egyptian times there would have been no star overhead marking true north. – http://www.world-mysteries.com/)

மொட்டை பாலைவனத்துல, செதுக்கினாமாதிரி சதுர வடிவுல கற்கள். ஒவ்வொரு கல்லும் 2 டன் எடை உள்ளது. இப்படி 2.5 மில்லியன் கற்களை கொண்டு எவ்வளவு வருஷம் வேலை பாத்து, ஒரு சிறு பிழைகூட இல்லாம எப்படி கட்டியிருக்கமுடியும்?


பிரமிடுகள் 4500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஸ்பிங்க்ஸ் எனப்படும் அந்த மனித தலையும் சிங்க உடலும் கொண்ட சிற்பம் 12,000 ஆண்டுகள் பழமையானது. இரண்டும் வேற வேற தானே, வெவ்வேறு கால கட்டங்கள்ல கட்டபட்டிருக்கும்ன்னு நாம சொல்லலாம். ஆனா இந்த ஸ்பிங்க்ஸோட காரணம் பிரமிடுகளை பாதுகாக்கன்னு சொல்றாங்களே. இல்லாத பிரமிடை பாதுகாக்கவா 12,000 வருஷங்களுக்கு முன்னாடி இதை கட்டி இருப்பாங்க.
சரிங்க வயசை விடுங்க.. எகிப்தியர்கள் நமக்கு என்ன ஆதரங்களை விட்டுட்டு போயிருக்காங்க?

இது எகிப்து சிற்பங்களில் ஒண்ணு.. என்ன என்ன தெரியுது நீங்களே பாருங்க.

ஹெலிகாப்டர்?
பறக்கும் தட்டு?
பண்டைய அட்லாண்டிஸ்க்கு வேற்று கிரகவாசிகள் வந்ததாகவும். அவர்களோட தொழிநுட்பத்தை அட்லாண்டிஸ்ல இருந்தவங்களுக்கு கத்து கொடுத்ததாகவும் சொல்லப்படுது. அட்லாண்டிஸ் அழிஞ்ச போது அங்க இருந்த சில எகிப்து வந்ததாகவும், அவங்க மூலமா எகிப்ப்தியர்கள் பல நுட்பங்களை தெரிஞ்சிகிட்டதாகவும் சொல்லப்படுது.
இந்த ஓவியம் கூட பிரமிடுல இருந்து தாங்க எடுத்தது

ஆக.. எந்தவிதமான அறிவியல் முன்னேற்றம் இல்லா காலம்ன்னு சொல்லப்படுற காலத்துல, எகித்தியர்கள் மட்டும் ஏன் இவ்வளவு அறிவாளியா இருந்திருக்காங்க? எப்படி ஒரு மர்மமான கட்டிட கலை அவங்களுக்கு தெரிஞ்சுது? எப்படி செத்துபோன உடல் கெட்டுப்போகாம இருக்கிறதுக்கான ரசாயனம் கைகூடிச்சு? டியூட்காமென்ங்கிற இளவரசனோட சவப்பெட்டி தான் முதன் முதலா முழுசா கிடைச்சுது. அதை திறந்தவங்க எல்லாரும் மர்மமான முறையில இறந்து போனாங்க. அவனோட கல்லறைல இந்த பூமிக்கு சொந்தமேயில்லாத(எங்குமே காணக்கிடைக்காத) பூஞ்சைகாலன் எப்படி வந்தது?

உலகத்துல எகிப்துல மட்டும் பிரமிடுகள் இல்லை. உலகத்தோட பல பகுதிகள்ல பிரமிடுகள் இருக்கு. பண்டைய காலத்துல எகிப்தியர்கள் போல / எகிப்தியர்களை விட அறிவான கலாச்சாரம் ஒண்ணு இருந்தது. அது பத்தி அடுத்த பாகத்துல எழுதுறேன்.

தேடல் – நாம் மட்டும் தானா இந்த அண்டத்தில்?

(நான் சொல்லப் போற விஷயங்களில் சிலருக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம், சிலருக்கு மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். இது என் எண்ண ஓட்டமே தவிர, என் முழுமையான கருத்து இல்லை. இந்த விஷயங்கள் பற்றி என் தேடல் இன்னும் முடிவடையவில்லை)

“உலகத்தின் கடைசி மனிதன், தனியாக ஒரு பூட்டிய அறையினுள் இருந்தான். அப்போது கதவு தட்ட பட்டது”

மறைந்த எழுத்தாளர் திரு.சுஜாதா அவர்கள் சிறந்த ஒருவரிக் கதை என்று இதை குறிப்பிட்டார்.

இந்த அண்டத்தில் பூமியில் வாழ்பவை மட்டும் தான் இருக்குதா? இது பல சாதரண மனுஷங்களையும், மிகப் பெரிய விஞ்ஞானிகளையும் ஆட்டி படைக்கிற‌ ஒரு விஷயம்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னாடி(கிட்டதட்ட 400 வருஷங்களுக்கு) ஜியோர்டானோ புருனோங்கிற(Giodarno bruno) போதகர் “அண்டத்தில் நம்ம பூமி மாதிரி பல பூமிகள் இருக்கு. அந்த பூமிகள் நம்ம சூரியன் மாதிரி இருகிற பல சூரியன்களை சுத்தி வருது. அந்த மாதிரி பூமியில நம்ம மனித இன‌த்தை போலவோ, இல்லை நம்ம இனத்தை விட அறிவுல சிறந்த இனமோ வாழுறாங்க” இதை சொன்னதுக்காக அவருக்கு விருது கொடுத்திருப்பாங்கன்னு நாம நினைக்கலாம். ஆனா நடந்தது என்ன தெரியுமா கி.பி 1600 வாக்குல அவரை சிலுவைல அறைஞ்சு உயிரோட எரிச்சாங்க. அந்த‌ கால‌த்துல‌ சூரிய‌ன் தான் பூமிய‌ சுத்திகிட்டு இருக்குன்னு சொன்னாங்க‌ளாம். இவ‌ர் பாட்டுக்கு இப்ப‌டி சொல்ல‌ போக‌ அவ‌ர் எரிஞ்சு போன‌து தான் மிச்ச‌ம்.


இப்போ நாம‌ வாழுற‌ கால‌ க‌ட்ட‌த்துல‌ யாராவ‌து பூமியை சூரிய‌ன் சுத்திட்டு வ‌ருதுன்னு சொன்னா நாம‌ அவ‌ரை பைத்திய‌ம்ன்னு சொல்ல‌ மாட்டோம்? சொல்லுவோம்ல‌. அதே மாதிரி தான் அந்த‌ கால‌த்துல‌ ஒரு சில‌ விஷ‌ய‌ங்க‌ளை சொன்ன‌வ‌ங்க‌ளை பைத்திய‌ம் சொன்னதோடு ம‌ட்டுமில்லாம‌ அவ‌ங்க‌ளை கொடுமை ப‌டுத்தி கொலையும் செஞ்சாங்க‌.


இன்னைக்கு இருக்கிற‌ கால‌ க‌ட்ட‌த்துல‌ பூமியில‌ வாழுற‌ இனங்க‌ளை த‌விர‌ வேற‌ கிர‌க‌ங்க‌ளிலும் உயிரின‌ங்க‌ள் இருக்குன்னு சொல்ற‌வ‌ங்க‌ளை நாம‌ ஒரு பைத்திய‌கார‌னாட்ட‌ம் தான் பாக்குறோம். அப்ப‌டி ஏன் இருக்க‌க் கூடாதுன்னு ம‌ண்டைய‌ போட்டு கொடைஞ்சுகிட்டு இருக்கிற‌வ‌ங்க‌ள்ல நானும் ஒருத்த‌ன்.
ப‌ற‌க்கும் த‌ட்டு, வேற்று கிர‌க‌ வாசிக‌ள்ன்னு எங்கேயாவ‌து சேதி வ‌ந்துதுன்னா ரொம்ப‌ ஆர்வ‌மா பாத்துகிட்டு தான் இருக்கேன். எதுக்காக‌ இந்த‌ ஆர்வ‌ம்ன்னு கேக்குறீங்க‌ளா? ஒருவேளை வேற‌ ஒரு கிர‌க‌த்துல‌ ம‌னித‌ இன‌த்தை விட அறிவுல‌ சிற‌ந்த‌ இன‌ம் ஒண்ணு இருக்குன்னு வ‌ச்சிக்குவோம். அவ‌ங்க‌ கிட்ட‌ இருந்து நிறையா விஷ‌ய‌ம் க‌த்துகிலாம்ல‌.(ஒரு வேளை அவ‌ங்க‌ அழிக்கிற‌ நோக்க‌த்துல‌ வ‌ந்தாவோ, இல்லை ந‌ம்மை விட‌ அறிவுல‌ க‌ம்மியாவோ இருந்தா அப்புற‌ம் பாத்துக்க‌லாம்).

இந்த‌ இணைய‌ம் வ‌ந்த‌துலேர்ந்து என‌க்கு நிறைய‌ விஷ‌ய‌ங்க‌ள் ப‌டிக்க் வாய்ப்பு கிடைச்சுது. ஒரு ப‌ற‌க்கும் த‌ட்டு அமெரிக்காவின் அரிசோனா மாகாண‌ம் ப‌க்க‌த்துல‌ விழுந்த‌ சேதி (1953), அப்புற‌மா ஏரியா 53 அப்ப்டிங்கிற‌ இட‌த்துல‌ இருக்கிற‌ ம‌ர்ம‌ம்ன்னு நிறைய‌ ப‌டிச்சேன். ப‌ல‌ புகைப்ப‌ட‌ங்க‌ள், ஒளிப்ப‌திவு காட்சிக‌ள்ன்னு வேற‌ இணைய‌ம் முழுக்க‌ கொட்டி கிட‌க்கு. அதுக்கு அப்புற‌ம் இர‌ண்டாம் உல‌க‌ப்போர்ல‌ இருந்த‌ விமானிகளோட‌ வாக்குமூல‌ம்‌, அது ச‌ம்ப‌ந்த‌மான‌ க‌ட்டுரைக‌ள், ப‌த்தாத‌துக்கு சி.என்.என் ல‌ வ‌ர‌ ஒரு நேர்காண‌‌ல் நிக‌ழ்ச்சின்னு என் நம்பிக்கைய வலுப்படுத்துற விஷ்யங்களை சொல்லிகிட்டே போக‌லாம்.

ஒருவேளை இது மாதிரியான‌ விஷ‌ய‌ங்க‌ள் பொய்யாக‌வும் இருக்க‌லாம். ஒருவேளை உண்மையா இருந்தா, அப்ப்டி ஒரு க‌ண்ணோட்ட‌த்துல‌ தான் என் ந‌ம்பிக்கை இருக்கு. ஒரு குறிப்பிட்ட‌ வெப்ப‌ நிலைல‌, குறிப்பிட்ட‌ வாயுக்க‌ள் உயிரின‌ங்க‌ளை பாதுகாக்கிற‌துக்கு சாத‌க‌மா இருந்தா என் ந‌ம்பிக்கை உண்மையான‌து. ஏன்னு கேட்டீங்க‌ன்னா, இப்போ ந‌ம்ம‌ சூரிய‌னை எடுத்துக்குவோம். இந்த‌ பால்வீதியில‌ ஒரு தூசு மாதிரி தான் சூரிய‌ன். அப்ப‌டி இருக்கும் போது ஏன் இதே மாதிரியான‌ சூழ்நிலை ம‌த்த‌ இட‌த்துல‌ இருக்க‌ கூடாது?


இன்னைக்கும் கூட மேற்கு பக்கம் இருக்கிற நாடுகள்ல ராத்திரி ஆனா, கேமிராவும் கையுமா ஒரு சில பேர் அலையா ஆரம்பிச்சிடுவாங்க. கொஞ்சம் பேர் டெலிஸ்கோப்ல கண்ணை வச்சிட்டு அப்ப்டியே வானத்த பார்த்துகிட்டு இருப்பாங்க. இவங்க எல்லாருக்கும் ஒரே ஆசை என்ன தெரியுமா? ஒரே ஒரு புகைப்படமோ, இல்லை பறக்கும் தட்டோட காட்சியோ தான். ஒரு நல்ல ஆதாரம் வேணும்ன்னு தான் அவங்க ஆசை.

தோழி

என் நட்பு பூந்தோட்டத்தில்
மலர்ந்த புதிய மலர் நீ.
சாதரண மலரா?
மலரின் மென்மை;
முள்ளின் கோபம்;
அதிசய ரோஜா நீ.

நான் காயப்பட்டால்
உன் கண்ணில் கண்ணீர்.
மகிழ்ச்சி அடைந்தால்
உன் முகத்தில் சிரிப்பு.
என்னை பிரதிபலிக்கும்
நட்புக் கண்ணாடி நீ.

உன் ந‌ட்பு கிடைக்க‌
நான் வேண்ட வில்லை;
தவம் செய்ய‌வில்லை;
எதுவும் செய்யாம‌லேயே
கிடைத்த‌ வ‌ர‌ம‌ல்ல‌வோ நீ!

பாலையாய் வெடித்து
பாழாய் இருந்த இதயத்தில்
தமிழ் அமிழ்தையே பொழிய வைத்தாயோ?
உன்னை நினைத்த உட‌னேயே
க‌விதை ஊறுகிற‌தே!

என்
காத‌லுக்கு க‌விதைகள் நூறு;
காதலிக்கு க‌விதைகள் ஆயிர‌ம்;
காத‌ல் தோல்விக்கோ
க‌விதைக‌ள் இல‌ட்சம்;
நம் ந‌ட்புக்கு ஒரே க‌விதை.
ஏன் தெரியுமா?

காதலை சொல்ல‌
வார்த்தைக‌ள் ப‌த்தாது.
ஆனால்
ந‌ட்பை சொல்ல‌
ஒரு வார்த்தை போதும்.
உயிரிருக்கும் வ‌ரை அது இனிக்கும்.

தேடல் – மனிதன்

இது நம்மை பற்றிய தேடல். “மனிதன் இந்த பூமியில் அறிவில் சிறந்தவன்” – நாம் நம்மை பற்றியே பெருமையா சொல்லிக்கிற விஷயம். ஆறாவது அறிவு உள்ள ஒரே இனம்ன்னு நாம நம்பிகிட்டு இருக்கிற இனம் மனித இனம். நம்முடைய வசதிக்கான விஷயங்களை கண்டுபிடிக்க அறிவியல் உபயோகமா இருக்கு, கணிதம் உபயோகமா இருக்கு, சில நேரங்களில் ஆறாம் அறிவு உபயோகமா இருக்கு. ஆனா இது எல்லாத்தையும் விட இந்த உலகம் எவ்வளவு உபயோகமா இருக்குன்னு நாம மறந்துட்டோம்.
மனிதனோட துவக்கம்ன்னு பார்த்தோம்னா டார்வினோட பரிணாம வளர்ச்சி விதியின் படி குரங்கு இனத்துலேர்ந்து வந்ததா சொல்றோம். ஆக, ஒரு குறிப்பிட்ட இனத்துலேர்ந்து பரிணாம வளர்ச்சியின் மூலமா வேறொரு இனமா உருவாகி இருக்கோம். அதிலும் மனிதக் குரங்குகள் இனமான சிம்பன்சி இனத்திற்கும், மனித இனத்திற்குமான சம்பந்தம் அதிகமா இருக்கிறதா அறிவியல் சொல்லுது. முதன் முதலா குரங்கிலிருந்து மனிதன் பரிணாம வளர்ச்சியடைந்த இடமாக கருதப்படுவது இன்றைய ஆப்பிரிக்கா கண்டம்.

பூமியோட ஆரம்ப கட்டத்துல நிலப்பகுதிகள் ஒன்றாக இருந்தது, அதுக்கு அப்புறமா வந்த கால, பருவ நிலை மாற்றத்தால பல பகுதிகளாக நிலம் பிரிந்தது. அது வரைக்கும் கிட்ட தட்ட ஒரே மாதிரி (உருவத்தால், குணத்தால்) இருந்த மனித இனம் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பிச்சுது. அதுனால தான் ஆப்பிரிகாவை சேர்ந்தவர்கள் கருமையான நிறத்திலும், ஐரோப்பா, வட அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் வெண்ணிறத்திலும், தென் அமெரிக்கா, மத்திய ஆசியாவைச் சேர்ந்தவர்கள் மாநிறத்திலும், கிழக்காசியா, தென்கிழக்காசியவைச் சேர்ந்தவர்கள் லேசான மஞ்சள் நிறத்திலும் வெவ்வேறு அளவிலான உடலமைப்போட இருக்காங்க. இதுல முக்கியமான விஷயம் என்னன்னு பாத்தோம்னா.. இதே போல மிருகங்களும் நிலப்பரப்பு பிரிஞ்ச போது தனித்தனியா பிரிஞ்சுது. ஆனா ஒரு சில மிருகங்கள் தான் கொஞ்சம் (மனித இனத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது) மாறிச்சு. எடுத்துக்காட்டு யானைகள்(ஆசியா, ஆப்பிரிக்கா), புலிகள் (ஆசியா, சைபீரியா), கரடிகள்(நிலப்பகுதி, துருவப்பகுதி). இந்த மாற்றமும் பெரும்பாலும் உடல் அளவுல தான் நடந்திருக்கே தவிர, குணத்துல இல்லை.


நாளாக நாளாக மனிதனோட வளர்ச்சி அதிகமா இருந்துச்சு. இதுக்கான முக்கியமான காரணம் இயற்கையின் மீதான பயம். கற்கால மனுஷன் தீயை கண்டுபிடிச்சான் (அதுவும் தற்செயல நடந்திருக்கும்ன்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க). தீயோட முக்கியமான உபயோகமா இருந்தது இரவுல வெளிசத்தை தரவும், இரவு நேரத்துல தாக்க வர மிருகங்களை விரட்டவும் தான். போக போக தான் சமைக்க கத்துகிட்டோம். அதுக்கு அப்புறம் மழைக்காக ஒதுங்க குகை, அப்புறம் மர வீடுன்னு தங்க இடம் பார்த்தான்.(இன்னைக்கோ நிலாவுல அடுக்குமாடி வீடு கட்டலாம்னு யோசனை) அப்புறமா எந்த மிருகம் சாதுவா, மனுஷனுக்கு அடங்கி போகுதோ அது எல்லாத்தையும் தன்னோட வசதிக்காக அடிமையாக்க ஆரம்பிச்சான்.(இன்னைக்கு அடங்கி போற நாட்டையே ஆள தொடங்கியாச்சு) அப்புறமா சக்கரம் வ்ந்துது.. கூடவே வண்டி வந்துது. ஆத்தாங்கரையில விவசாயம் வளர்ந்தது.. புதுப்புது கலாச்சாரங்கள் வளர ஆரம்பிச்சுது. மனுஷனோட கண்ணோட்டமும் மாற ஆரம்ப்பிச்சுது.


கலாச்சாரங்கள் வளர வளர அதிகமானது என்ன தெரியுமா.. ஆயுதங்கள். கற்காலத்துல வெறும் கல்லெடுத்து மிருகத்தை விரட்டின மனுஷன், கலாச்சாரங்கள் ஆரம்பிச்ச உடனே தன்னோட பகுதியை காப்பத்தவும், அடுத்தவனோட பகுதியை அபகரிக்கவும் வேல், வாள்ன்னு தொடங்கி இன்னைக்கு அனுகுண்டு, கிருமி யுத்தம்ன்னு போய்கிட்டு இருக்கான். ஆனா நம்ம கூட பிரிஞ்ச மிருகங்களை பாருங்க காலம் எவ்வளவு மாறினாலும் அதுங்க மாறாம தான் இருக்கு. ஒரு சில மிருகங்கள் சுத்தமா அழிஞ்சு கூட போயிருக்கு. ஆனாலும் அது அழியுற வரைக்கும் கூட அதோட சொந்தமான குணத்தோட தான் இருந்திருக்கு.


ஏன் சிவா நமக்கிருக்கிற அறிவை வச்சிகிட்டு நல்லது எதுவுமே பண்ணலையான்னு நீங்க கேட்கலாம். நான் இல்லைன்னு மறுக்கவே மாட்டேன். இன்னைக்கு நான் எழுதுற இந்த எழுத்தை உங்க இடத்திலேர்ந்தே நீங்க பாக்குறீங்கனா அதுக்கு காரணமும் நம்மோட அறிவு தான். பலவிதமான ஆட்கொல்லி நோய்கள் இன்னைக்கு இல்லாம பண்ணி இருக்கோம்னா அதுக்கு காரணமும் இதே அறிவுதான். ஆனாலும் சிந்திச்சு பாருங்க இந்த அறிவு எவ்வளவு பேரை காப்பாதியிருக்கு, எவ்வளவு பேரை அழிச்சிருக்கு. இந்த அழிவுகள் மட்டும் இல்லைனா இன்னைக்கு நான் இப்படி பேசுவேனா? அந்த காலத்துல ஏற்பட்ட சிலுவை யுத்தங்களேர்ந்து ஆரம்பிச்சு, முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப்போர், இராக் யுத்தம், ஆப்கான் யுத்தம், ஈழத்து போர்ன்னு நிறுத்தாம அழிவுகள் நடந்துகிட்டே தான் இருக்கு.

ஒரு புறம் யுத்தம் மக்களை கொல்லுதுன்னா. இன்னொரு புறம் மாசு, தூசு, புகைன்னு இயற்கையோடவும் நாம விளையாட அரம்பிச்சுட்டோம். நாம இயற்கைக்கு தர அழிவு பத்தி யாரும் அதிகமா பேசுறதில்லை. ஆனா இயற்கை ஒரு சின்ன அழிவைத்தந்தாலும் நாம கடவுளை குத்தம் சொல்ற அளவுக்கு கூட போவோம். இது தான் நம்ம அறிவு நமக்கு கொடுத்திருக்கிற மனப்பான்மை. இன்னும் சொல்லப்போனா நாம இயற்கைக்கு தர அழிவுகளோட விளைவைத் தான் நாம அனுபவிக்கிறோம். பூகம்பம், சுனாமி இது எல்லாமே நம்ம பூமியில நடந்துகிட்டு இருக்கிற இயற்கையான நிகழ்வுகள்.. காலம் காலமா இது நிகழ்துகிட்டே தான் இருக்கும். ஏன்னா பூமியோட குணம் மாறாது. நினைச்ச உடனே மாற அது என்ன மனுஷனோட மனமா.

பரிணாம வளர்ச்சியில பார்த்தோம்னா.. ஒரு இனம் இன்னொரு மேன்பட்ட இனமா மாறும். வெறும் உடல் நிலை மாற்றம் மட்டுமில்லை பரிணாம வளர்ச்சி, ஒரு உயிரினத்தோட அறிவு சார்ந்த செயல்கள், குணங்கள்ன்னு உள்ளடக்கினது தான் பரிணாம வளர்ச்சி. ஒரு செல் உயிரியில இருந்து இன்னைக்கு மனுஷன் வரைக்கும் அப்படித்தான் வளர்ந்திருக்கோம். பரிணாம வளர்ச்சி இத்தோட நின்னுறாதுங்கிறது மட்டும் நிச்சயம். ஆனா நாம இப்ப இருக்கிற நிலைலேர்ந்து இதை விட மேம்பட்ட இனமா மாறுவோமா? இது தான் கவலைக்குரிய கேள்வி. நாம அப்படி மாறினாத்தான் நமக்கு ஆறறிவு இருக்கிறதுல பெருமை.

பரிணாம வளர்ச்சி எல்லாம் வரதுக்கு ரொம்ப நாள் ஆகும் சிவா, அப்போ நாம இருப்போமோ மாட்டோமோ!! ஏன் இப்பவே கவலை படனும்ன்னு நினைக்காதீங்க. பரிணாமம்ன்னு சொன்னாலே கொஞ்ச கொஞ்சமா தான் நடக்கும். ஒரே நாள்ல குரங்குலேர்ந்து மனுஷனா நாம மாறலை. இப்பவும் நாம இன்னொரு இனமா தான் மாறிகிட்டு இருக்கோம். இது தான் உண்மை. ஒருவேளை அது என்ன இனம்ன்னு நமக்கு தெரியாம இருக்கலாம். ஆனா நம்மோட சந்ததியினர் அந்த இனமாத்தான் மாற போறாங்க. எப்படி நம்ம சொத்தை பத்திரமா பாதுகாத்து நம்ம வாரிசுங்க கையில கொடுப்போமோ, அதே மாதிரி இந்த உலகத்தையும் பத்திரமா நம்ம வாரிசுங்க கிட்ட கொடுக்க வேண்டிய கடமை நம்ம கிட்ட இருக்கு.

நாம வாழுற பூமியோட இறுதி வரைக்கும் நம்ம இனம் கண்டிப்பா இருக்கனும். இப்படியே பூமியோட சூழலை அரிச்சிகிட்டே இருந்தோம்னா பூமி அழியுறதுக்கு முன்னாடியே மனித இனம் இல்லாம போயிடும். இந்த உலகம் நம்மோட சொத்து. இந்த உலகத்துல வாழுற, இருக்கிற எல்லா உயிரினத்துக்கும் இந்த பூமி சொந்தம். அதை என்னைக்கு மனுஷ இனம் முழுசா புரிஞ்சு நடக்குதோ அன்னைக்குதான் நாமா மனுஷன விட மேம்பட்ட இனமா மாறி இருக்கோம்னு சொல்ல முடியும்.
தேடல் தொடரும்

அடங்காதவன்

மரணத்தின் வாசலில்
பூத்துச் சிரிக்கும் பூ நான்.

மழைப் போர்வை போர்த்தி
குளிர்காயும் குயில் நான்.

எரிக்கும் சூரியனின் கீழ்
நிழல் தேடும் மேகம் நான்.

மண்ணில் புதைந்து கொண்டு
முளைக்கத் துடிக்கும் விதை நான்.

சுழற்காற்றிலும் சுதந்திரமாய்
சுற்றித் திரியும் பாட்டம்பூச்சி நான்.

பாறையையும் பிளந்து
நீரருந்தும் மரவேர் நான்.

சாம்பலையும் உயிராக்கி
மீண்டும் பிறக்கும் பீனிக்ஸ் நான்.

என்னை சிதைத்து என்னையே
உருவாக்கும் சிற்பி நான்.

நான் அடங்காதவன் தான்….

தேடல் – துவக்கம்

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அந்த விஷயத்திற்கு தொடக்கம்ன்னு ஒண்ணு இருக்கும். ஒரு சில விஷயங்களுக்கான அல்லது பொருட்களுக்கான துவக்கம் என்ன என்பது நமக்கு தெரியும். உதாரணமா ஒரு விமானத்தோட கண்டு பிடிப்பு, மின்சாரத்தோட கண்டுபிடிப்பு, கணிதம், அறிவியல் கண்டுபிடிப்புகள் கட்டிடங்கள்ன்னு பல விஷயங்களை சொல்லலாம். ஆனா… நமக்கு தெரியாமலேயே பல விஷயங்கள் தொடங்கிடுச்சு. அதுனால தானோ என்னவோ பெரியவங்க சொல்லி இருக்காங்க

“கற்றது கையளவு, கல்லாதது உலகளவு”

உதாரணத்துக்கு சில விஷயங்களை பார்ப்போம்…

(நான் சொல்லப் போற விஷயங்களில் சிலருக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம், சிலருக்கு மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். இது என் எண்ண ஓட்டமே தவிர, என் முழுமையான கருத்து இல்லை. இந்த விஷயங்கள் பற்றி என் தேடல் இன்னும் முடிவடையவில்லை)

1. அண்டம்

என்னை கேட்டீங்கனா உலகத்துல இன்னும் அவிழ்க்கமுடியாத புதிர் அண்டத்தோட துவக்கம். சாதரணமா பாத்தீங்கனா, ஒரு பொருள் உருவாகிறதுக்கு ஆரம்பம் ஒரு சிறு விஷயம் தான் ஆரம்பமா இருக்கனும், ஒரு பெரிய மரத்துக்கு சின்ன விதை மாதிரி. அப்படினா இந்த அண்டத்தோட துவக்கமும் ஒரு சிறு பொருள் தானா? அப்படி ஒரு சிறு பொருள் மூலமா அண்டம் உருவாகினதுன்னு சொல்றோம்ன்னு வச்சிக்கங்க. அந்த சிறு பொருளோட இருப்பிடம் என்ன? அந்த பொருளோட துவக்கம் என்ன? அந்த சிறு பொருள் எப்படி உருவானுச்சு?

இல்லை, அண்டம் வந்து இவ்வளவு பெருசா இருக்கும் போது எப்படி சிவா அது சிறு பொருள் மூலமா உருவாகியிருக்கும் நீங்க கேக்கலாம். அப்படி பாத்தா சிக்கல் இன்னும் கொஞ்சம் கூடுமே!!! அந்த பெரிய பொருள் ஒரு அண்டத்தை மட்டும் தான் உருவாக்கி இருக்குமா? அந்த பெரிய பொருளோட தொடக்கம் என்ன, எங்க இருந்து இந்த துவக்கம் ஆரம்பம் ஆச்சு?

சரிங்க இந்த அண்டம் எப்படியோ உருவாயிடுச்சு.. தொடக்கம் தெரியலை. ஒரு பொருள் இருக்குன்னு வச்சிக்குவோம் இன்னைக்கு இருக்கிற அறிவியல் முன்னேற்றத்தை வச்சு, எவ்வளவு சிறிய பொருளானாலும் சரி, எவ்வளவு பெரிய பொருளானாலும் சரி அதோட பரப்பளவு, கொள்ளளவு, எடைன்னு எல்லா விஷயத்தையும் கண்டுபிடிக்கலாம்னு நாம நம்பி கிட்டு இருக்கோமே! இது உண்மையா? பூமியோட எடை கண்டுபிடிச்சாச்சு, சூரியனோட எடை கூட கண்டுபிடிச்சிரலாம், ஒவ்வொரு கிரகத்துக்கும் இடையிலான தூரத்தை கூட கண்டுபிடிக்கலாம்.. தோராயமா நம்ம கண்ணுக்கு தெரிய நட்சத்திரங்கள் எவ்வளவுன்னு கூட கண்டு பிடிக்கலாம், மொத்த பால்வெளிகளோட எண்ணிக்கை கூட தோராயமா கண்டுபிடிக்கலாம்.. அதுக்கு மேல என்ன செய்ய முடியும்? சொல்லுங்க.

சரி இது கண்டிப்பா அவசியமா சிவான்னு நீங்க கேட்பீங்க..

சாதரணமா இல்லைங்க கண்டிப்பா அவசியமானது தான். இன்னும் கொஞ்சம் அறிவியல் முன்னேற்றம் இருந்தா நம்ம மாதிரி மனுஷங்க வாழறதுக்கு சாத்திய கூறு இருக்கிற இடத்தை இதன் மூலமா கண்டுபிடிக்கலாம்.
நமக்கு சூரியனும் ஒரு நட்சத்திரம்ன்னு நல்லா தெரியும். இந்த சூரியனைச் சுத்தி எட்டு கிரகங்கள்(ஒன்பதா இருந்துச்சு.. ). இந்த எட்டு கிரகங்களில் நமக்கு பூமி வாழத் தகுந்த இடமா இருக்கு. அப்படின்ன இந்த பால்வெளியில் எவ்வளவு நட்சத்திரங்கள் இருக்கு, அதை சுத்தி எவ்வளவு கிரகங்கள் இருக்கும். அதுல ஒண்ணு ரெண்டு கூடவா தேறாது… அந்த ஆதங்கம் மட்டும் தாங்க, என்னுடைய இது மாதிரியான கேள்விகளுக்கான துவக்கம்.

இன்னும் பல கேள்விகள் இருக்கு… அதுவரைக்கும் நீங்களும் இது பத்தி யோசனை செய்யுங்க….

மெய் பொய்யாக

ஆதியும் அந்தமுமில்லா

பரம்பொருளை அடைய

ஆரம்பிக்கும் என் தேடல்…

மெய் பொருள் தேடி

தியானம் கொண்டு

யோகத் தீ வளர்த்து

உயிரை உருக்கி

உள்ளம் சுருக்கி

என்னை நான்

தேடும் வேளையில்

பாழாய் போன விதி

மனதோடு சேர்ந்து

விளையாட தொடங்கும்.

கன்னியின் விழியம்புகளில்

ஆசை நாண் பூட்டி

காதல் கணைகளை

குறி பார்க்க வைக்கும்.

கட்டிவைத்த கட்டுப்பாடு

கட்டவிழ்ந்து போய்விட

கட்டிப்போட்ட ஆசைகள்

சிறகடித்து வெளிவர

நான்கு கண்கள் சேர

மனதிரண்டும் மோத

காதலோ காமமோ

கதை ஒன்று தொடங்கிவிடும்.

உயிரென்ன உடலென்ன

நீயென்ன நானென்ன

எல்லாமும் நாமென

அனைத்தும் ஒன்றென

கவிதைகள் பாடி

காதல் மொழி பேச வைக்கும்.

காலங்கள் ஓடும்

காட்சிகள் மாறும்.

காதல் மொழிகள்

காற்றில் மறைய

கவிதைகள் காணாமற்போக

கன்னியவள் மறைய

காதல் தொலையும்.

மெய்யெது தெரியாமல்,

உயிரெது தெரியாமல்,

என்னை நான் தேட போய்

என்னை தொலைத்த கதையிது.